விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ்பேரடிக்குப்பம் பகுதியில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக ஏரியின் மதகு உடைந்து கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது.
இந்த வெள்ளத்தால் அங்கிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின. அதே போல் சுமார் 25 ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கின. இதனால் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள், துணிகள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
பாதுகாப்பு நடவடிக்கை
இது குறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன், திண்டிவனம் வட்டாட்சியர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
பின்னர், பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து கீழ் எடையாளம் - வேங்கை சாலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் வெள்ள நீர் வடிய ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சேறும் சகதியுமாக உள்ள சாலைகள்: நாற்று நட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்!