விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி வருகின்ற 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தொகுதி முழுவதும் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அக்கட்சி வேட்பாளர் நா. புகழேந்திக்கு ஆதரவாக ஸ்டாலின் நகர், ஆரியூர், வெங்கந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திண்ணைப் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அங்கிருந்த மக்கள், தங்கள் பகுதியில் சாலை, குடிநீர், மின்விளக்கு, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கைவைத்தனர்.
இதைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், "தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் உங்கள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறாமல் உள்ளது. திமுக வெற்றிபெற்றுவிடும் என்பதனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் உள்ளனர். சீன பிரதமர் மகாபலிபுரம் வந்ததால் அந்த நகரமே சிங்கப்பூரை விஞ்சும் அளவுக்கு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசு மக்களின் அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. விரைவில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களது கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்படும்.
இதற்கு நீங்கள் முன்னோட்டமாக வருகிற 21ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் நா. புகழேந்திக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" என்றார்.
அப்போது திமுக தொண்டர்கள் தங்களது குழந்தைகளுக்கு பெயர்சூட்ட வேண்டும் எனக் கேட்டுகொண்டனர். இதை ஏற்ற அவர் பெண் குழந்தைக்கு கவிதா எனவும் ஆண் குழந்தைக்கு கருணாநிதி எனவும் பெயர் சூட்டினார்.