விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்புத்தொடர்பாக விழுப்புரம் மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் பள்ளி தாளாளர் சார்பாக ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தனர். அந்த மனுவின் விசாரணை இன்று (ஆக. 1) நடைபெற்றது. அப்போது, சிபிசிஐடி போலீஸாரையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கக்கோரி, பள்ளி நிர்வாகம் சார்பாக மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சிபிசிஐடி போலீஸாரின் மருத்துவ அறிக்கை இன்று வரையும் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்கிற காரணத்தைக்கூறிய நீதிபதி, ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் மருத்துவ அறிக்கையைத்தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனிடையில், கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் தாயார் தரப்பில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனக்கூறி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
மேலும், மாணவியின் தாயார் சார்பாக வழக்கறிஞர் காசி விசுவநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,"முதல் மற்றும் இரண்டாம் கட்ட உடற்கூராய்வு பரிசோதனையை புதுவை ஜிப்மர் மருத்துவமனையைச்சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கின் தீவிரத்தை உணர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக்கூடாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் ; கைதான 5 பேர் ஜாமீன் கோரி மனு!