கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஜூன் 30ஆம் தேதி வரை ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கியது முதலே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கி பணிபுரிந்து வரும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானம் இன்றி பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் கடந்த சில நாள்களாக, குடிபெயர்ந்த தொழிலாளர்களை சிறப்பு ரயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்துவருகின்றன.
அந்த வகையில், மும்பையில் இருந்து இன்று விழுப்புரம் வந்த சிறப்பு ரயில் மூலம் தமிழ்நாட்டில் விழுப்புரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களைச் சேர்ந்த 954 நபர்கள் இன்று விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடைந்தனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் மற்றும் பிற அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் வழங்கி, அவர்களது சொந்த ஊருக்கு சிறப்புப் பேருந்து மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.