இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம், பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் கூடிய இந்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த மீனவர்களின் மேம்பாட்டு வளர்ச்சித் திட்டத்தில் மீனவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தினை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 'இந்திரா ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் வழிமுறைகளின்படி, வீடு ஒன்றுக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
வீடு கட்டும் திட்டத்தில் பயன்பெற, பயனாளி முழுநேர மீன்பிடிப்பில் ஈடுபடுபவராகவும், வீடுகட்டுவதற்குரிய நிலம் 25 சதுர மீட்டர் பரப்பளவுக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
மேலும் தற்சமயம் குடிசை வீட்டில் வசிக்கும் பயனாளிகளை இத்திட்டத்தின் கீழ், அவர்கள் வசிக்கும் குடிசை வீட்டினை நிரந்தர இடமாக மாற்றிக் கொள்ளலாம். பயனாளி அரசின் வேறு எந்த ஒரு வீட்டுவசதித் திட்டத்தின் பயன் அடைந்திருத்தல் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது".
மேலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ள மீனவ/ மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் விண்ணப்பங்களை விழுப்புரம் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 25-ஆம் தேதிக்குள் அளித்திட வேண்டும் எனவும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.