விழுப்புரம்: மே தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கெடார் கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துக்கொண்டார்.
அப்போது கெடார் ஊராட்சி மன்ற தலைவர் இந்திராமணி பொது வரவு - செலவு கணக்குகளை பொதுமக்கள் மத்தியில் வாசித்தார். பின்னர் கூட்டத்தில் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, கெடார் ஊராட்சிக்கு உயர்நிலை பள்ளிக்கூடம், காவல் நிலையம், தொடக்க கூட்டுறவு வேளாண் சங்கம் உள்ளிட்டவைகளை கொண்டு வந்தது திமுக அரசு தான் என கூறினார்.
மேலும் இங்கு உள்ள உயர்நிலையில் படித்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் தனது மகளுக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லை என கூறினார். இதற்கு உன் மகள் எந்த கல்லூரியில் படிக்கிறார் என அமைச்சர் கேட்க, அவர் தனியார் கல்லூரியில் பயில்வதாக அந்தப் பெண் குறிப்பிட்டார். உடனடியாக தனியார் கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு பணம் கிடையாது என அமைச்சர் கூறியதை கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் ஏற்பட்ட சலசலப்பை தொடர்ந்து, அருகில் இருந்த அதிகாரிகள் கூறியதை அடுத்து சுதாரித்துக் கொண்ட அமைச்சர் பொன்முடி தனியார் கல்லூரியில் பயில்பவர்களுக்கும் ஊக்கத்தொகை உண்டு என கூறினார். பின்னர் இது தொடர்பாக மனுவாக எழுதிக் கொடுக்கவும் என அப்பெண்ணிடம் கூறினார். இதனைத் தொடர்ந்து, செல்லங்குப்பம் பகுதியில் 13 வருடங்களாக சாலை மற்றும் குடிநீர் வசதி இல்லை என தொடர்ந்து பொதுமக்கள் கேள்வி எழுப்பவே, ஆவேசமடைந்த அமைச்சர் "எவ இவ" "சொல்றத முதல்ல கேளு" என ஆவேசமடைந்தார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி, விழுப்புரத்தில் நடந்த அரசு நியாயவிலை கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, மேடையில் நின்றிருந்த ஒன்றிய சேர்மனிடம் "ஏம்மா நீ எஸ்சி தானே? என கேட்ட சம்பவம் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. அதேபோல், சென்னை அம்பத்தூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, இலவச பேருந்து குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, "பெண்கள் நீங்கள் எங்கே போனாலும் ஓசி தான்.. ஓசி பஸ்சில் தான் போறீங்க" என கூறினார்.
கடந்த மார்ச் மாதம் விழுப்புரம் அருகே அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி தன்னிடம் குறைகளைக் கூறிய மக்களைப் பார்த்து "ஆமா எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சுட்டீங்க" என கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, திமுக ஆட்சியில் ஒரு குறையும் இல்லை என திராவிட மாடல் குறித்து பெருமிதமாக பேசிக்கொண்டிருந்தார்.அப்போது, கீழே இருந்த பெண் ஒருவர், "இங்கே எல்லாமே குறையாக தான் இருக்கு" என குற்றம் சாட்டினார். இதனைக் கேட்ட பொன்முடி, "நீ வாயை மூடு கொஞ்சம்" என மீண்டும் ஒரு பெண்ணை ஒருமையில் பேசியிருந்தார்.
அமைச்சர் பொன்முடி தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பொதுமக்களை இழிவாக பேசுவதும், கட்சி மேலிடம் அவரை கண்டிக்காமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்றம் மே இறுதியில் திறப்பு? பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!