விழுப்புரம் மாவட்டம் மலட்டாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பரசுரெட்டிப்பாளையம் மேட்டுப்பாளையம் இடையேயான தரைப்பாலத்தில் இடுப்பளவு வெள்ளநீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த பாலத்தை பள்ளி மாணவிகள் ஆபத்தான முறையில் கடக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்னையாற்றில் 3ஆவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் தென்பெண்னையாற்றின் கிளை ஆறான மலட்டாற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் பரசுரெட்டிப்பாளையம் இடையேயான தரைப்பாலம் முற்றிலுமாக வெள்ளநீரில் மூழ்கி இடுப்பளவு நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் போக்குவரத்து துண்டிக்கபட்டுள்ளது. அதன்காரணமாக பரசுரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளிக்கு சென்றுவருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (அக் 21) பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பிய 10 மாணவிகள் இடுப்பளவு தண்ணீரில் தரைப்பாலத்தை ஆபத்தான முறையில் கடந்துள்ளனர். அப்போது தரைப் பாலத்தின் அருகே நின்றிருந்தவர்கள் மாணவிகளை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:மயூரநாதர் கோயில் யானைக்கு புத்தாடை அணிவிப்பு