விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அம்மாகுளத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் தனது மகளுக்கு மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்காக மாருதி சுசூகி காரில் உறவினர்களை அழைத்துக் கொண்டு ஈரோடு நோக்கிச் சென்றார்.
கார் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாக துருகம் புறவழிச் சாலையில் சென்றது. அப்போது, கார் ஓட்டுநர் சிவக்குமார் தூங்கியதால் நிலைதடுமாறிய சுசூகி கார் கவிழ்ந்து அருகேயிருந்த 15 அடி பாலத்தின் ஓடைப் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த இரண்டு பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தியாக துருவம் காவல் துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனையடுத்து காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் ஏழுமலை, பாலாஜி, சித்ரா, ஜெயக்கொடி ஆகிய நான்கு பேர் இறந்திருப்பதாகத் தெரிவித்தனர்.