கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்துள்ள நயினார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆரம்பிக்கபட்ட ஆண்டுமுதல் கடந்தாண்டுவரை படித்துச் சென்ற மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி ’நட்பு திருவிழா 2020’ என்ற பெயரில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என்ற நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள் இதுவரை இந்தப் பள்ளியின் தேவைக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்திருந்தாலும், இந்தாண்டுமுதல் முன்னாள் மாணவர் சங்கம் அமைத்து அதன்மூலம் சுற்றுச்சுவர் கட்டடம், சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, சொட்டு நீர் குழாய் வழங்கி பூங்கா, மரங்களைப் பராமரிப்பது, நலிவுற்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி, மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
மேலும் தங்களின் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதோடு அனைவரும் தங்கள் நண்பர்களோடு குழு, குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இறுதியில் தங்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தி நினைவுப் பரிசுகளை வழங்கியதோடு அனைவரும் தங்கள் நண்பர்களோடு மதிய உணவு உண்டு மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க:ஃபிட் இந்தியா திட்டம் - தமிழ்நாட்டில் கலக்கிய சைக்கிள் பேரணி!