விழுப்புரம்: விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கக்கூடிய உணவகங்களில் சென்னை நோக்கி செல்லக்கூடிய அரசு பேருந்துகளில் வரக்கூடிய பேருந்து பயணிகள் உணவு அருந்துவதற்காக நிறுத்தப்படுகிறது. இந்த உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது என்று ஓரிரு மாதங்களாக தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளால் அந்த உணவகங்களின் மீது புகார் தெரிவித்து வந்தனர்.
இதனை அடுத்து நேற்று இரவு விழுப்புரம் மாவட்டம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுகுந்தன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு பத்துக்கு மேற்பட்ட உணவகங்களை ஆய்வு செய்தனர். குறிப்பாக விக்கிரவாண்டி சுங்கச்சாவடி நிலையம் அருகே இருக்கக்கூடிய சரவணபவன் உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்ட போது அங்கு இருக்கக்கூடிய சமையலறைகள் மற்றும் தின்பண்டங்கள் ஆகிவைகளை ஆய்வு செய்தனர்.
அப்போது தேதி குறிப்பிடப்படாத தின்பண்டங்கள், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இலை ஆகியவைகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான கெட்டுப் போன பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி குப்பைத் தொட்டியில் போட்டனர். உங்கள் உணவகங்களில் இதுபோன்று மீண்டும் நடைபெற்றால் உணவகத்தின் உரிமை ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இறுதியாக எச்சரித்துள்ளனர்.
நெடுந்தூரம் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளில் நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் நெடுஞ்சாலை உணவங்களில் கெட்டுப்போன உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் பயணத்தின் போது ஓய்விற்காக நிறுத்தம் செய்யும் பயண வழி உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது மற்றும் சுகாதாரமற்ற முறையில் கழிவறைகள் பராமரிக்கப்படுவது தொடர்பாக பயணிகள் அளித்த புகார்களின் அடைப்படையில் போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்க ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.
அப்போது விக்கிரவாண்டி அருகே சாலையின் இருபுறமும் உள்ள வேல்ஸ் உணவகம் பயணிகளுக்கு சுகாதாரமற்ற முறையில், தரமற்ற உணவு மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் வழங்கியது கண்டறியப்பட்டு அங்கு அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும் நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்கள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வது, சுகாதாரமற்ற பொருட்களை விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் உணவங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.