விழுப்புரம்: கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, பம்பை ஆறு, துரிஞ்சல் ஆறு ஆகிய ஆறுகளிலிருந்து 30 ஆயிரம் கன அடி உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
இதனால், தென்பெண்ணை ஆற்றில் (Then Pennai River) வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், எனவே எல்லீஸ்சத்திரம் தடுப்பணை, தளவானூர் தடுப்பணை, சொர்ணாவூர் தடுப்பணை ஆகிய தடுப்பணைகள் வழியாக வங்கக்கடலில் உபரி நீர் கலக்க உள்ளதால் இன்று (நவம்பர் 19) அதிகாலை முதல் தென்பெண்ணை ஆற்றில் அதிகளவு நீர் வரக்கூடும் என்றும்;
முன்னரே விடுக்கப்பட்ட எச்சரிக்கை
எனவே, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள 16 கிராம மக்கள் ஆற்றுப் பகுதிக்குச் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தளவானூர் மற்றும் திரிமங்கலத்திற்கு இடையே கடந்த ஆண்டு 25 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்பட்டது.
கட்டப்பட்ட தடுப்பணை ஓரிரு மாதங்களுக்கு உள்ளாகவே உடைப்பு ஏற்பட்டது. திரிமங்கலம் பகுதியில் உள்ள கதவணை உடைந்து நீர் முற்றிலுமாக வெளியேறியது.
இந்தநிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு
மேலும், சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டதால் அதிக அளவு நீர் வரத்து வரத் தொடங்கியது. இந்த நிலையில் தடுப்பணையில் மற்றொரு கதவுப் பகுதியில் லேசான உடைப்பு ஏற்பட்டு, பின்னர், பெரிய உடைப்பாக அது மாறியது. அதனைத் தொடர்ந்து நீர்வரத்து விளை நிலங்களுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் உடைந்த தடுப்பணையை முழுமையாக வெடிவைத்துத் தகர்க்கத் திட்டமிட்டு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் கொண்டு இரண்டு முறை வெடி வைத்துத் தகர்த்தனர்.
தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகே உள்ள சுடுகாடு நேரடியாக அடித்துச் செல்லப்பட்டது. இதற்கிடையே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மலட்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு
திருப்பாச்சூர் மலட்டு ஆற்றில் தரைப்பாலத்தில் நீர் அதிகமாகச் செல்கிறது. இதனால் தளவானூர் தென் குச்சிபாளையம், திருப்பாச்சி நூர் ஆகிய ஊர்களுக்கு யாரும் செல்ல முடியாத அளவுக்கு நீர் செல்கிறது. எனவே, அந்தப் பகுதி மக்கள் யாரும் கரையைக் கடக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு விடுத்துள்ளது.