விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி நேரில் ஆஜரானார். எதிர் தரப்பு குறுக்கு விசாரணைக்காக புகார்தாரரான பெண் ஐபிஎஸ் அலுவலரும் ஆஜரானார். ஆனால், முன்னாள் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜராகவில்லை.
அவருக்குப் பதிலாக, அவரது தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி கோபிநாதன் ஏற்றுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, புகார்தாரரான பெண் ஐபிஎஸ் அலுவலரிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு குறுக்கு விசாரணை செய்யலாம் என்று நீதிபதி கோபிநாதன் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, 'எங்களுடைய சீனியர் வழக்கறிஞர் வராததால் குறுக்கு விசாரணை செய்ய எங்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும்' என முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் கூறினார்.
நீதிபதி கடும் எச்சரிக்கை
இந்நிலையில், ஆரம்பத்திலிருந்தே வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. ஏதாவது சில காரணங்களைக் கூறி மனு போடுகிறீர்கள்.
இனிமேல் மனு போட்டால் வாங்க முடியாது என முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து நீதிபதி கோபிநாதன் கடுமையாக எச்சரித்தார்.
இதனைத் தொடர்ந்து, புகார்தாரரான பெண் ஐபிஎஸ் அலுவலரிடம் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி தரப்பு குறுக்கு விசாரணை செய்யலாம் என நீதிபதி கேட்டுக்கொண்டார்.
குறுக்கு விசாரணை
அதன்பேரில், செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வெங்கடேசன், தெய்வநாயகம் ஆகியோர் புகார்தாரரான பெண் ஐபிஎஸ் அலுவலரிடம் சாட்சி குறுக்கு விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து இவ்வழக்கு விசாரணையை வரும் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
புகார்தாரரான பெண் ஐபிஎஸ் அலுவலரிடம் தொடர்ந்து 5:15 மணிநேரம் நடைபெற்ற செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி தரப்பு குறுக்கு விசாரணை நிறைவுபெற்றது.
வரும் 4ஆம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி வாகன ஓட்டுநர் ராமராஜன், பெரம்பலூர் மாவட்ட அப்போதைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் சாட்சியம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:ராம்குமார் மரணம்: மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க இடைக்காலத் தடை