விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த கூனிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மோனிஷா திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
அதைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்துவந்தார். இந்நிலையில் நேற்று (ஜுன் 5) வெளியான நீட் தேர்வு முடிவில் மோனிஷா 31 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து மோனிஷாவின் உடலை வெளியே கொண்டுவந்தனர். பின்னர் மோனிஷா புதுச்சேரி உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோனிஷா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மோனிஷாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு தோல்வியால் ஏற்கனவே இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், மோனிஷாவின் மரணம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.