தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் உள்ள 3,227 வாக்குச்சாவடி மையங்களில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் இல. சுப்பிரமணியன் காலை 8 மணி அளவில் தனது வாக்கை பதிவு செய்தார்.
இதேபோல் பூந்தோட்டம் பகுதியில் அமைந்திருந்த தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் திமுக முன்னாள் அமைச்சர் கா.பொன்முடி மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பொன்.கௌதமன் சிகாமணி ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
மேலும் திண்டிவனம் தனியார் பள்ளி வாக்குச் சாவடியில் பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். வானூர் தாலுகா மொரட்டாண்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் தனது வாக்கை பதிவு செய்தார். திண்டிவனம் அருகே உள்ள பகுதியில் அமைந்திருந்த வாக்குச்சாவடியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தன் வாக்கை பதிவு செய்தார்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதி பொறுத்தவரையில் காலை 9 மணி நிலவரப்படி 12.66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.