விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சே.குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர், ஹேமலதா.
அனிமேஷன் நுட்பம் மூலம் பாடங்கள் கற்பிப்பு:
கரோனா முதல் அலை தொடங்கி, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட காலத்திலேயே மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்று தன் சொந்த செலவிலேயே அனிமேஷன் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, பாடநூலினை பென்டிரைவ் மூலம் வழங்கி, கிராமப்புற மாணவர்களின் கல்வியில் புதுமையைப் புகுத்தியுள்ளார். இவரின் இச்செயலைப் பாராட்டும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் ஹேமலதாவை வெகுவாகப் பாராட்டி கவுரவித்தார்.
ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கல்:
இதனைத்தொடர்ந்து இரண்டாவது கரோனா அலையில் பள்ளிகள் அனைத்தும் முழுவதுமாக மூடப்பட்டு இருக்கும் சூழலிலும், தனது சமூகப் பணியைச் செவ்வனே செய்து வருகிறார்.
மாவட்ட நிர்வாகம் மூலம் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு மனரீதியான ஆலோசனை வழங்கி, அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியும், சாலையோரம் வாழும் ஆதரவற்றவர்களுக்கு காலை, மாலை உணவு வழங்கியும் உதவி வருகிறார்.
27 நாட்கள்... வேடமிட்டு விழிப்புணர்வு பரப்புரை:
தன்னைப்போன்று விழுப்புரம் கெடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் பெருமாள் என்பவருடன் ஒருங்கிணைந்து, கூத்துக்கலை மூலம் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் பல்வேறு சமூக சேவைப்பணிகளில் தன்னை இணைத்துக்கொள்ளும் இவர் ஆசிரியையாகப் பள்ளியில் பயிலும் மாணவர்களை மட்டுமல்ல; தன்னால் சமூகத்தையும் மாற்ற முடியும் என்பதற்கு பெரும் உதாரணமாகத் திகழ்கிறார்.
கரோனா பெருந்தொற்று காலத்திலும் மக்களுக்கு தன்னால் முடிந்த சேவையினை செய்து வரும் இவர் பெண்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் ஓர் சமூக வழிகாட்டி என்றால் அது மிகையாகாது.
இதையும் படிங்க: ஹேக்கர்களிடமிருந்து விலகியே இருங்கள் - சைபர் கிரைம் தரும் அறிவுரைகள்!