விழுப்புரம் மாவட்டம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகே உள்ள இடைத்தரகர்களின் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
பின்னர், இடைத்தரகர்களையும் அலுவலர்களையும் ஒன்றாக வைத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்ததால், அலுவலகத்தில் உள்ளே இருந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மிக தாமதமாக வெளியே அனுப்பப்பட்டனர். இதனால், லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த இரு தினங்களுக்கு முன் விழுப்புரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திய நிலையில், தற்போது போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்ற சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.