நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விமான நிலையம், ரயில் நிலையம், முக்கிய கோயில்கள், சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்பட முக்கிய ரயில் நிலையங்களிலும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டுவருகின்றன.
மாநில எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் காவலர்கள் உஷார் நிலையில் இருக்கவும், ரோந்து பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணி நாளை முதல் வருகிற 16ஆம் தேதி வரை தொடரும் என்று காவல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.