விழுப்புரம்: புயல் கரையைக் கடந்தாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் வட மாவட்டங்களில் இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று (டிச.11) மாலை 5 மணி முதல் மரக்காணம் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
தொடர் மழையின் காரணமாக மரக்காணம் பகுதியில் உள்ள உப்பளங்களில் மழைநீர் சூழ்ந்த காரணத்தால் கடந்த இரு தினங்களாக 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். மாண்டஸ் புயலின்போது வீசிய காற்றினால் 100 ஏக்கருக்கும் மேல் கதிர் வந்த நிலையில் இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்தன. இதனால், விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன. இதனால், பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
தீர்த்தவாரி கடலில் குளிக்க தடை: இந்நிலையில் மரக்காணம் தீர்த்தவாரி கடலில் குளிப்பதற்கும், பார்வையிடவும் நேற்று (டிச.11) சுற்றுவட்டார கிராம மக்கள் வாகனங்களில் வந்தனர். கடலின் சீற்றம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் நலன் கருதி கடலோர காவல் படையினர் கடலில் இறங்கத் தடை விதித்தனர்.
மேலும், தடையை மீறி அங்கு பொதுமக்கள் வருவதைக் கண்ட கடலோர காவல் படையினர் ECR-ல் பேரிகார்டுகள் வைத்து பொதுமக்கள் வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர். மேலும், ஏற்கெனவே தீர்த்தவாரி கடல் பகுதிக்குச் சென்றவர்களை தடுத்து நிறுத்தினர்.
மேலும், அவர்களுக்கு கடற்கரை ஆழமாக இருப்பதால் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவே அனுமதி கிடையாது என்று அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். இந்த வாரம் முழுவதும் தீர்த்தவாரி கடல் பகுதிக்கு பொதுமக்கள் வர அனுமதி கிடையாது என மரக்காணம் கடலோர காவல் படையினர் அறிவித்துள்ளார்கள்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!