தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொதுப்பணித்துறை ஏரிகளில் குடிமராமத்து திட்டப் பணியானது, அந்தந்த ஏரிகளில் திட்ட மதிப்பீட்டில் 10% பாசனத்தாரர்களின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் வருவாய்த்துறையினரோடு இணைந்து ஏரியின் எல்லைகளைக் கண்டறிந்து எல்லைக் கற்களைப் பதித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மதகுகளைக் கட்டுதல், கலுங்கல் சீரமைத்தல், வரத்துக்கால்வாய்களைத் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 73 ஏரிகளில் ரூ.26.42 கோடி செலவில் குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ளன. அதில், கீழ் பெண்ணையாறு வடிநிலக் கோட்டம், விழுப்புரம் மூலம் 50 ஏரிகளில் ரூ.13.65 கோடிக்கும், வெள்ளாறு வடிநிலக் உபகோட்டம் கள்ளக்குறிச்சி மூலம் 23 ஏரிகளில் ரூ.12.77 கோடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 6,975 ஹெக்டேர் ஆயக்கட்டு நிலம் பாசன வசதி மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.