விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சித்திடலில் புதுச்சேரி பட்டினத்தார் மற்றும் பழங்குடி பணிக்குழு சார்பில், பட்டியல் இன கிறிஸ்தவர்களை ஆதி திராவிடர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஆக.10) கறுப்பு நாள் அனுசரிக்கப்பட்டது.
குறிப்பாக, பட்டியலின கிறிஸ்தவர், பட்டியலின இஸ்லாமியர்களை இணைத்து தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும்; பட்டியலின கிறிஸ்தவர், இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டை மறுக்கும் குடியரசுத்தலைவர் ஆணை 1950 பத்தி 3-யை உடனே நீக்கவேண்டும்; நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் பட்டியலின கிறிஸ்தவர்கள், பட்டியலின இஸ்லாமியர் ஆகியவர்களை தேசியப் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆக.10 ஆம் தேதி, துக்க நாள் (கறுப்பு நாள்) அனுசரிக்கப்பட்டது. இந்த அறப்போராட்டத்தில், அப்பகுதியிலுள்ள ஏராளமான பட்டியலின கிறிஸ்துவர்கள், பட்டியலின இஸ்லாமியர்கள் கறுப்பு உடை அணிந்து கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுவை-கடலூர் மறைமாவட்ட பேராயர் பிராஸ்சிஸ் கலிஸ்ட் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். இதில் புதுவை கடலூர் மாநில எஸ்சி எஸ்டி பணிக்குழு செயலாளர் அற்புதராஜ் மற்றும் பணிக்குழு தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 10 ஆம் தேதி துக்க நாள் அனுசரிப்பு - மாநில எஸ்சி,எஸ்டி பணிக்குழு அறிவிப்பு!