விழுப்புரம்: விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் வேண்டும், திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேட்டினை கண்டித்து மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ள மதுவினால் உயிரிழப்பு ஏற்படுவது மற்றும் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தி விற்பனை செய்யப்படுவதை கண்டித்தும் 15 அடி உயரமுள்ள மதுபாட்டிலில் 10 ரூபாயுடன் ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தின் நடுவே பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம், “தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி என்றால் யாருக்கும் தெரியாது.. ஆனால், பத்து ரூபாய் அமைச்சர் என்றால் எல்லாருக்கும் தெரியும். கோடிக் கணக்கில் கொள்ளையடித்த அமைச்சரை நீக்காமல் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் திமுக அரசு வைத்துள்ளது” என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சென்னையில் ஒரு நாள் மழைக்கே வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனை பற்றி கவலை படாமல் முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூரில் தனது தந்தைக்கு கோட்டத்தை திறந்து வைக்கிறார். பணம் வாங்கி கொண்டு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த செந்தில் பாலாஜி மீது ஸ்டாலின் தலைமையில் உள்ள காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. கேட்டால் அமலாக்க துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறி தமிழ்நாடு குற்றப்பிரிவு காவல் துறையினர், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்” என கூறினார்.
மேலும், “தவறு செய்ததால் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அப்போதைய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்காமல் பழி வாங்கும் நடவடிக்கை என தெரிவித்து வருகிறது. எந்நாளும் அவரை காப்பாற்ற முடியாது” என சாடினார்.
அண்ணா நகர் ரமேஷ், சாதிக்பாஷாவின் நிலைமை தான் செந்தில் பாலாஜிக்கு ஏற்படும், செந்தில் பாலாஜி பாவம் அவர் எங்களோடு இருந்தவர் என்பதால் இதனை கூறுவதாகவும் இல்லாத நோயிக்கு சிகிச்சைப் பெற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி ஓடி ஓடி வாக்கு சேகரிக்க முடியாது, பின்னர் முதலமைச்சர் குடும்பத்தினர் காப்பாற்ற மாட்டார்கள் என தெரிவித்தார்.
இரண்டு ஆண்டு திமுக ஆட்சியில் முதலமைச்சர் தனது தந்தைக்குப் பேனா அமைப்பது, கோட்டம் அமைப்பதை விட வேற எதுவும் செய்யவில்லை என கூறிய அவர் கலால் துறையை ஏன் தனது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் வழங்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மீதான ED-யின் மேல்முறையீட்டு மனு - உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!