திமுகவின் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் அரசு மட்டுமே நிவர்த்தி செய்யக்கூடிய நான்காயிரத்து 614 மனுக்களை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் க. பொன்முடி, மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரையை நேரில் சந்தித்து வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய க. பொன்முடி, "ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளோம். தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் விழுப்புரத்தில் போலியான முகவரியில் வசிக்கும் நபரை வைத்து, அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்று பொய்யான தகவலை அளிக்கிறார். அமைச்சரே இப்படிப் பொய்யான தகவல்களை அளிப்பது கண்டிக்கத்தக்கது.
தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவே அமைச்சர் காமராஜ் இப்படிப் பேசுகிறார். அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்களையே அமைச்சர்கள் வழங்கிவருகின்றனர். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுரு அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் மட்டுமே கரோனா நிவாரணத் தொகை அளித்துவருகிறார்.
கரோனாவை வைத்து அதிமுகவினர் அரசியல் செய்துவருகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே தமிழ்நாட்டை கரோனா பிடித்துவிட்டது. கரோனாவை வைத்து அதிமுகவினர் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் எண்ணத்தில் அதிமுக செயல்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மும்பையில் தவிக்கும் கூலித்தொழிலாளர்களை மீட்க முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மனு