விழுப்புரம்: தற்போது இருவழிச்சாலையாக உள்ள திண்டிவனம்-மரக்காணம் வழிபாதை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.296 கோடி செலவில் இந்தப் பணி நடைபெற உள்ளது. இந்தப் பணியின் தொடக்க நிகழ்ச்சி நேற்று (ஆக. 4) நடைபெற்றது.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சாலை பணியை பூஜைகளுடன் தொடங்கி வைத்தார். இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். பின்னர், செய்தியாளர்களிடத்தில் பேசிய அமைச்சர்,”இந்தப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்படுகின்றன. அவைகளின் கட்டுமானத்தொழிலுக்கு தேவைப்படும் கருங்கல், ஜல்லி, எம் - சாண்ட் இங்கிருந்து தான் லாரிகள் மூலம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், புதுவை மாநிலத்திற்கும் கொண்டு செல்லப்படுகிறது.
அதிக லோடு ஏற்றிக்கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் இந்த சாலைகளில் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. மழைக்காலத்திலும் இந்த சாலை முற்றிலுமாக சேதம் அடைகிறது. இதைக்கருத்தில் கொண்டு திண்டிவனம் - மரக்காணம் இடையே இருவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது.
மேலும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சிறு பாலம், வடிகால் கால்வாய், தடுப்புச்சுவர்கள், பஸ் நிறுத்தம், சாலை சந்திப்புப்பகுதி, சாலையில் மைய தடுப்புச்சுவர், சாலையின் இரு பக்கங்களிலும் புதிய மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்டப் பணிகள் நடைபெற உள்ளன”, என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விழுப்புரத்திலுள்ள தங்கும் விடுதிகளுக்கு கலெக்டர் விடுத்த எச்சரிக்கை!