விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் நேற்று மாலை ஆறு மணி அளவில் வழக்கமான வாகன தணிக்கையில் செஞ்சி காவல் நிலைய காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்திய பயிற்சி உதவி ஆய்வாளர், அந்த வாகனத்தை ஓட்டிவந்த நாகராஜ் (23) என்பவரிடம் விசாரித்துள்ளார்.
அப்போது அவரிடம் வாகனத்திற்கான ஆவணங்கள் இல்லாதாதால், வாகனத்தை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்த பயிற்சி உதவி ஆய்வாளர், ஆவணங்களைக் காட்டிவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லும்படி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் நாகராஜ், தனது தந்தைக்கும் அண்ணனுக்கும் தகவல் சொல்லி அவர்களோடு காவல் நிலையம் வந்து வாகனத்தை தரும்படி கேட்டு பணியில் இருந்த காவலர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அங்கிருந்த சிலர், தங்களது செல்ஃபோனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவலர்களிடம் தகராறில் ஈடுபட்ட நாகபூண்டி கிராமத்தைச் சேர்ந்த அவர்களின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.