விழுப்புரம்: மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 55க்கும் மேற்பட்டோர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் 48 பேர் பொது சிகிச்சைக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, புதுச்சேரி அரசு மருத்துவமனை மற்றும் மரக்காணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் கடந்த 20ஆம் தேதி 22 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனிடையே, விஷச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அது மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
அதேநேரம், விஷச்சாராயம் விவகாரம் தொடர்பாக மரக்காணம் காவல் நிலையத்தில் அவசர வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. அப்போது, இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் ஆகியோர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதேபோல், சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த புதுவை முத்தியால்பேட்டை ராஜா என்ற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை மற்றும் சென்னை திருவேற்காடு இளைய நம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கினை மரக்காணம் காவல் துறையினர் கொலை வழக்காக மாற்றினர்.
இந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறைக்கு மாற்றப்பட்டது. மேலும், இதன் விசாரணை அதிகாரியாக விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் டிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மரக்காணம் காவல் நிலையத்தில் இருந்த வழக்கு ஆவணங்கள் அனைத்தும் விசாரணை அதிகாரி டிஎஸ்பி கோமதியிடம் வழங்கப்பட்டது.
இந்த ஆவணங்களைப் பெற்றுக் கொண்ட சிபிசிஐடி காவல் துறையினர், கடந்த மே19 ஆம் தேதி முதல் விசாரணையைத் தொடங்கினர். இதில், மரக்காணத்தைச் சேர்ந்த அமரன், ரவி, முத்து ஆறுமுகம் மற்றும் ரசாயன நிறுவன உரிமையாளர் இளையநம்பி உள்பட 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த 12 பேரில் மதன் என்பவரைத் தவிர, மற்ற 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விஷச்சாராயம் வழக்கில் 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மரக்காணம் விஷச் சாராய வழக்கில் சிறையில் உள்ள 11 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறைக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும், இந்த வழக்கு சிபிசிஐடி நிலையில், கொலை வழக்காக பதிவு செய்து 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம்: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு; கெமிக்கல் பேக்ட்ரி உரிமையாளர் கைது!