விழுப்புரம்: பெண்கள் அனைவருக்கும் உணவு, வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்தவும், வன்முறையற்ற வாழ்க்கையை வழங்கிடவும் வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நாடு தழுவிய முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் அனைத்து குடும்பங்களுக்கும் அத்தியாவசிய பொருள்கள் ரேஷன் கடைகள் மூலம் விலையில்லாமல் வழங்க வேண்டும். நூறு நாள்கள் வேலைத்திட்டத்தில் அனைவருக்கும் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை நகர்ப்புறங்களுக்கும், பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களையும், தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிலாளர் விரோத சட்டங்களையும், அதில் பெண்களை பாதிக்கும் மகளிர் விரோத திருத்தங்களையும் திரும்பப் பெற வேண்டும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு அரசு வங்கிகள் மூலம் நிபந்தனைகள் ஏதும் இன்றி கடன் வழங்கிட வேண்டும்.
நுண்நிதி நிறுவனங்களில் பெண்கள் வாங்கியுள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டும் .கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களுக்கு பொருளாதாரம் சார்ந்த தொழில் பயிற்சி அளித்து தொழில் கடன் வழங்கிட வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த பெண்களை பாதுகாக்கும் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரா தலைமை தாங்கினார். மேலும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:விலை உயர்வு; ஒப்பாரி வைத்து போராடிய மாதர் சங்கம்