விழுப்புரம்: கோலியனூர் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன் கோவிலில் பத்து நாள் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இதில் ஏழாவது நாளான இன்று ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த மக்கள் ஒன்று கூடி சாமிக்கு பூஜை நடத்த வேண்டும் என்பது ஊர் மக்களால் முன்னர் கூடி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையாக கூறப்படுகிறது.
ஆனால் ஆதிதிராவிட மக்களை பூஜை நடத்தவும், சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் கந்தன், கற்பகம், கதிரவன் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்து விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலை கண்டித்தும், கோவிலுக்கு உள்ளே தங்களை தரிசனம் செய்யவும், சாமிக்கு பூஜை செய்யவும் அனுமதிக்கவில்லை என்று கூறி 100க்கும் மேற்ப்பட்டவர்கள் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் இரு மார்க்கத்திலும் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த விழுப்புரம் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான குழு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: விழுப்புரம் கொலை சம்பவம்; எதிர்கட்சியினர் தீர்மானத்திற்கு முதலமைச்சர் பதில்