விழுப்புரம்: 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின்போது, அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அப்போதைய சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் எழுந்தது.
இதனையடுத்து இதுதொடர்பாக புகார் அளிக்கச் சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியை, அப்போதைய செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கின் விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிந்த நிலையில், தற்போது வழக்கை விசாரித்த சிபிசிஐடி காவல் துறையினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று (பிப்.14) நடந்த விசாரணையில், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
ஆனால், பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. எனவே இதற்கான காரணத்தை அவருடைய வழக்கறிஞர் நீதிபதி முன் தெரிவித்தார். அதேபோல் வழக்கில் உதவி விசாரணை அதிகாரியான விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கோமதி, நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அவரது சாட்சியம் முடிந்ததும், அவரிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை வருகிற 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார். தற்போது இந்த வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எனவே இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கில் விரைவில் தீர்ப்பு!