விழுப்புரம்: தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்காததை கண்டித்தும், மின் கட்டணம், பால் விலை போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே, பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், திரைப்பட நடிகையுமான நமிதா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "திமுக அரசு ஆட்சிக்கு வரும் முன்பாக பல்வேறு வாக்குறுதிகள் அளித்தது. அதை நிறைவேற்றாமல் தமிழகத்தில் உள்ள அப்பாவி பெண்களை ஏமாற்றி விட்டது.
குறிப்பாக அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறிவிட்டு, 10 சதவீதம் பெண்களுக்கு கூட ஆயிரம் ரூபாய் தரவில்லை. மகளிர் உரிமைத் தொகை தகுதி உள்ளவருக்கு மட்டும் தான என்று கூறி, கார், பைக் இருக்கும் வீடுகளுக்கு தருவதில்லை என அறிவித்துள்ளது.
தற்போது பைக் இல்லாத வீடு எதாவது இருக்கிறதா. அதுமட்டுமின்றி குறிப்பிட்ட கேஸ் இணைப்பு இருந்தாலும் கூட உரிமைத்தொகை வழங்குவதில்லை என்று அறிவித்துள்ளனர். ஆனால் பிரதமர் மோடி பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பை ஏற்கனவே வழங்கி விட்டார். ஆனால் அவர்களுக்கு கூட ஆயிரம் ரூபாய் வழங்குவதில்லை.
இத்தகைய செயல்கள் எல்லாம் திமுக அரசு, தமிழக மக்களுக்கும், பெண்களுக்கும் செய்யும் பச்சை துரோகம். அதேபோல் பேருந்தில் மகளிருக்கு இலவசம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அந்த அறிவிப்புக்கு முன்னர் பேருந்தில் பயணம் செய்தால் ஆண், பெண் யாராக இருந்தாலும் பத்து ரூபாய் தான் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
ஆனால் தற்போது பெண்களுக்கு இலவசம் என்று கூறிவிட்டு, அதே பேருந்தில் பயணம் செய்கிற ஆண்களுக்கு 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இது எந்த விதத்தில் நியாயம் ஆகும். மேலும் இது போன்ற பல்வேறு கட்டண உயர்வுகளை தமிழக அரசு செய்து வருகிறது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அது குறித்த மிகப் பெரிய பட்டியல் என்னிடம் உள்ளது. அதை அனைத்தும் இங்கு சொல்வதற்கு நேரம் இல்லை. தமிழ மக்கள் இதைப் போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லாமல், மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றால் தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலர வேண்டும்" என்று நடிகை நமிதா பேசினார்.