விழுப்புரம்: திருவீக வீதியில் வசித்து வரும் சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் மற்றும் குடும்பத்தினரை காமெடி நடிகர் ரோபோ சங்கர் தன் குடும்பத்துடன் சென்று சந்தித்தார். உலக நாடுகள் சாதிக்க முடியாத சாதனையான நிலவின் தென் துருவத்தில் முதலாவதாக காலடித் தடம் பதித்த நாடு இந்தியா என்கிற வரலாற்று சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது.
கடந்த 14 நாட்களாக வெற்றிகரமாக ஆய்வுகளை முடித்துவிட்டு தன்னை சுமந்து வந்த லேண்டருக்குள் ஸ்லிப் மோட் நிலைக்குச் சென்றுள்ளது ரோவர். ரோவர் நடத்திய ஆய்வில் நிலவில் பல தாதுக்கள் இருப்பதை கண்டறியப்பட்டு உள்ள நிலையில் இஸ்ரோ மற்றும் இந்தியாவை உலக நாடுகள் வாழ்த்தி வருகிறது. இது இந்தியாவின் தொழில்நுட்பத்துக்கு கிடைத்த சாதனை.
இந்நிலையில், சந்திரயான் 3ன் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தமிழகத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார். விழுப்புரம் விஞ்ஞானி வீரமுத்துவேலை கௌரவிக்கும் விதமாக இந்திய பிரதமர், தமிழக முதலமைச்சர், அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
மேலும், வீரமுத்துவேலின் தந்தையான ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பழனிவேலை, பலர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காமெடி நடிகரான ரோபோ சங்கர் தன்னுடைய குடும்பத்துடன் நேரில் சென்று பழனிவேலை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதையும் படிங்க: சேலம் சோனா கல்லூரியில் சந்திரயான்-3 வெற்றி விழா!
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரோபோ சங்கர், "தமிழகத்தில் பின் தங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த வீரமுத்துவேல், இந்த மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் விதமாக சந்திரயான் 3 திட்டத்தில் வெற்றி பெற்று அனைத்து மாணவர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார் என்றார்.
தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில் போதை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் இதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதால் போதை என்ற வார்த்தை இல்லாத அளவிற்கு தமிழகம் மாறும் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு பதிலளித்த ரோபோ சங்கர், அடுத்த சூப்பர் என்று என்னை கேட்டால், நான் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறுவேன் என்றார்.
மேலும், தன்னை பொறுத்தவரை ரியல் சூப்பர் ஸ்டார் என்றால் விஞ்ஞானி மற்றும் தமிழனின் பெருமையை உலகிற்கு அடையாளப்படுத்திய அப்துல் கலாம் என்றும் அவருக்கு அடுத்ததாக மீண்டும் இந்தியாவில் தமிழனின் பெயரை நிலை நாட்டிய வீரமுத்துவேல் தான்" என ரோபோ சங்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெங்களூரில் தமிழகத்தை சேர்ந்தவர் மீது தாக்குதல்.. முன்விரோதம் காரணமா.. போலீஸ் விசாரணை!