விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், திரைப்பட நடிகர் பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் பல்வேறு பிரிவுகளில் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதனையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கேள்விக்கு பதில் அளித்து பேசினார்.
அப்போது பேசிய பார்த்திபன், “உங்களது கனவு பலிக்க நீண்ட ஒரு பயிற்சியும் முயற்சியும் தேவை. தன்னடக்கத்திற்கு உதாரணம், ரஜினிகாந்த். பொன்னியின் செல்வன் விழாவில் ரஜினி பேசியது, தன்னைத்தானே குறைத்துக் கொண்டு மற்றவர்களை புகழ்ந்து பேசுவதுதான், தன்னடக்கம். மிக உயர்ந்த இடத்திற்குச் செல்பவர்கள் தன்னடக்கத்துடன் பேசுவதுதான் அழகு.
அதுதான் தன்னடக்கம். பெற்றோர்களை விட குழந்தைகள் அதிக புத்திக் கூர்மை உடையவர்கள். மாணவர்களை விட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அதிகமாக படிக்க வேண்டும். இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு அறிவுத்திறன் பன்மடங்கு அதிகம். அதுதான் உண்மை. அவர்களுடைய அறிவுத்திறன் வளர்ச்சிக்கு ஏற்றபடி, அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அவர்களின் போக்குப்படி, பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்.
நமது குழந்தைகள் நம்மை விட அதிக புத்திக்கூர்மை உடையவர்கள் என்பதை நாம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த காலத்துப் பழைய படங்கள் போன்ற பண்புகள் மற்றும் குடும்ப பாங்கான படங்கள் எடுப்பதற்கு கண்டிப்பாக முயற்சி மேற்கொள்வேன். இது போன்ற படங்கள் எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் எனக்கு வேண்டும். எந்த தொழில் செய்தாலும், அந்த தொழிலில் வேகமாகவும் சிறப்பாகவும் செயல்பட்டால் எந்த தொழிலும் எந்தத் துறையிலும் முன்னேறலாம்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிபிஎஸ்இ பள்ளியின் நிறுவனரும் விழுப்புரம் திமுக சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் லட்சுமணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா, பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: விண்ணில் பாய தயாராகும் அக்னிகுல்..! 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தயாரான ராக்கெட் எஞ்சின்