விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் காலனி பகுதி புதுமனை வீதியைச் சோ்ந்தவர் கவிதாஸ் வயது 26. ஜேசிபி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 2019 பிப்ரவரி 19-ம் தேதி ஒரு கிராமத்தில் பணியில் இருந்த போது நள்ளிரவு 12 மணியளவில் 70 வயது மூதாட்டியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்.
இது தொடா்பாக திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் கவிதாஸ் மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கை புதன்கிழமை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சாந்தி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கவிதாசுக்கு இயற்கையாக மரணம் ஏற்படும் வரை சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, காளிதாஸ் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞராக சங்கீதா ஆஜரானாா். இவ்வழக்கில் தண்டனை பெற்ற கவிதாஸ் மீது ஏற்கெனவே 5 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்குகளும், ஒரு ஆதாயக் கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆயுதப்படை காவலர்களை அநாகரிகமாக நடத்தும் காவல் கண்காணிப்பாளர்!!