விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி 2019 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஓய்வு பெற்ற 690 பணியாளர்களுக்கு ரூபாய் 96 கோடியே 19 லட்சம் காசோலையை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் வழங்கினார். அவருடன் மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங், எம்எல்ஏக்கள் குமரகுரு, பிரபு மற்றும் முத்தமிழ்ச் செல்வன் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் அணைக்கட்டு உடைப்பு குறித்த கேள்வி எழுப்பியபோது, "கடலூர் மாவட்டம் இடையே தடுப்பணை புதிதாக அமைக்கப்பட்டது. அது முடியும் தருவாயில் கனமழையின் காரணமாக தடுப்பணை மூன்று முறை முழுவதுமாக நிரம்பியது.
தடுப்பணை உடைந்தது என்று கூறுவது தவறு. அணை உடையவில்லை. கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் பகுதியில் உள்ள தடுப்பு சுவர் அருகே சூழல் ஏற்பட்டதால் ஏற்பட்ட சேதம் தான் இது. தடுப்பு சுவர் மட்டுமே பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இயற்கையால் ஏற்பட்டதா அல்லது மனிதத் தவறுகளால் ஏற்பட்டதா என ஆய்வுக்குப்பின் தெரியும்.
மண் சரிந்து பாதிப்புக்குள்ளான பகுதியில் புதிய தடுப்புச்சுவர் 7 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டு முதலமைச்சர் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்" என பதிலளித்தார்.
மேலும் முதலமைச்சர் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி கூறும் அவதூறுகளுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றம் செல்லட்டும் என்றும் தெரிவித்தார்.