விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே காதலை ஏற்றுக் கொள்ள மறுத்த மாணவியைக் கத்தியால் கொடூரமாக வெட்டிக் கொன்ற இளைஞரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதன். இவருடைய மகள் தரணி (வயது 20). அதே பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜர் என்பவரின் மகன் கணேசனும், தரணியும் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கணேசன் - தரணி இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
கணேசன் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருந்ததாகவும் அதைத் தாமதமாக அறிந்து கொண்ட தரணி "நீ இனிமேல் என்னிடம் பேச வேண்டாம்" என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த கணேசன் இன்று(மார்ச்.17) காலை 6 மணி அளவில் தரணி வீட்டிற்குச் சென்று உள்ளார்.
வீட்டின் அருகே மறைந்து, காத்திருந்த கணேசன் தரணி வெளியே வந்த சமயம் பார்த்துத் தான் கொண்டு வந்த கூர்மையான ஆயுதத்தால் அவரின் பின் மண்டையில் தாக்கி விட்டு ஓடியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைலக்குலைந்த தரணி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைக் கண்ட தரணியின் தாத்தா அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து உள்ளார். காவல் துறைக்குத் தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்து கொலை செய்யப்பட்ட தரணியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்நிலையில் விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் கொலை வழக்கில் கணேசனைத் தேடி வந்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், விக்கிரவாண்டி அருகே கணேசன் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலைக் கொண்டு 2 மணி நேரத்தில் கைது செய்தனர். வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நல்லா தூங்குனீங்களா..! இன்று உலக தூக்க தினம்!