விழுப்புரம் மாவட்டம், சித்தலிங்கமடம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், ராமநாதபுரம் மாவட்டம், முத்துகிருஷ்ணன் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, தனது மகன்கள் ஐந்து பேரை ஆடு மேய்க்கும் வேலைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் ஆடும் மேய்ப்பதற்காக பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் 5 பேரும், நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் கிராமத்திற்கு வந்தனர். அங்கு கடந்த ஒரு மாத காலமாக வயல்வெளிகளில் 650 ஆடுகளை மேய்ச்சலுக்கு விடும் பணியில் இந்தச் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிறுவர்கள் பணியில் ஈடுபட்டு இருந்ததைக் கண்ட, திருக்கண்ணபுரம் கிராமவாசிகள், நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர், கமல் கிஷோருக்கு இதுகுறித்து புகார் அளித்தனர்.
இதனையடுத்து திருக்கண்ணபுரம் சென்ற, வருவாய் கோட்டாட்சியர் கமல் கிஷோர் அங்கு, வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் ஐந்து பேரிடமும் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது அவர்கள் வறுமையின் காரணமாக பெற்றோர்கள் வாங்கிய 50 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த கொடுமை தெரியவந்தது.
இதையடுத்து சிறுவர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்திய, பரமக்குடியைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மாரி, கன்னியப்பன், திருப்பதி, சிவராஜ், சின்ராசு ஆகிய ஐந்து சிறுவர்களையும் மீட்டனர்.