விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு அப்பகுதியின் நீர் ஆதாரமாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது பெரும்பாக்கம் ஏரி. அப்பகுதி விவசாயத்திற்காக பயன்படுத்தும் வகையிலும், தண்ணீரை சேமிக்கும் வகையிலும் பெரும்பாக்கம் ஏரி சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில், பெரும்பாக்கம் ஏரியின் மதகு இன்று (நவ.22) எதிர்பாராத விதமாக உடைந்தது. மதகு உடைந்ததையடுத்து, ஏரியில் இருந்த தண்ணீர் முழுவதும் தாழ்வுப் பகுதியான விவசாயப் பகுதிக்குள் வெளியேறியது. இந்த ஏரியின் நீர்த்தேக்கம் சுமார் 2,500 ஏக்கர் நீர் பாசனம் கொண்டுள்ளது.
பெரும்பாக்கம், தோகை பாடி, வெங்கடேசபுரம், கோனூர் உள்ளிட்ட கிராமங்களின் விவசாய பகுதிகளுக்கும் நீர் ஆதாரமாகவும் இருந்து வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் 65 லட்சம் ரூபாய் செலவில் இந்த ஏரியின் மதகு புதிதாக சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து சில நாட்களாக பெய்த மழையில், ஏரியில் மழைநீர் தேங்கியது. இந்நிலையில், திடீரென ஏரியின் மதகு உடைந்தது.
அப்பகுதி முழுவதும் சுமார் 200 ஏக்கர் அளவில் நெல் சாகுபடி பயிரிடப்பட்டு இருந்த நிலையில், ஏரியில் இருந்த தண்ணீர் அந்த விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனையடுத்து விவசாய நிலங்கள் முற்றிலும் சேதமடைந்தன. தரம் இல்லாத கட்டிடப் பணியால் தான் மதகு உடைந்ததாக அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்த மதகு உடைப்பு ஏற்பட்டதனால் தண்ணீர் வெளியேறி அந்தப் பகுதியில் சுமார் 200 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், மதகு சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் முறையாக மதகு அமைக்காததால் தான் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் அவரது ஒப்பந்தத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வடகிழக்கு பருவ மழையானது தற்போது தீவிரம் அடைந்து வருவதால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இன்று (நவ. 22) அதிகாலை முதலே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் ஏரியின் மதகு உடைப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுவரை மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "கடந்த 10 மாதங்களில் 6,500 பேரிடம் காய்ச்சல் கண்டுபிடிப்பு.. மழைக்கால வைரஸ் காயச்சலை கண்டு அச்சம் வேண்டாம்" - அமைச்சர் மா.சு!