விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கரசனூர் சித்தேரி கரைப் பகுதியில் இருளர் பகுதி அமைந்துள்ளது. இங்கு ரங்கநாதன் என்பவரின் மனைவி மைதிலி (55) என்பவர் கூரை வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தார்.
மளமளவென பரவிய தீ
அப்போது, தீப்பொறி கூரை வீட்டில் பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ காற்றில் மளமளவென பரவி அருகிலிருந்த கூரை வீடுகளுக்கு அடுத்தடுத்துப் பரவியது. இது குறித்து உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்கு்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
குடிசை வீடுகள் சேதம்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வானூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் அருகிலிருந்த வசந்தா, சுதாகர், சங்கர், மாரிமுத்து, மணி உள்ளிட்டோரின் மொத்தம் 12 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின.
வட்டாட்சியர் விசாரணை
இந்தத் தீ விபத்தில் வீட்டிற்குள் இருந்த கட்டில், அலமாரி, டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து நாசமாயின. பின்னர் இது தொடர்பாக வானூர் வட்டாட்சியர் சங்கரலிங்கம், வருவாய்த் துறை அலுவவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: எண்ணெய் ஆலையில் தீ: ரூ.25 லட்சம் பொருள்கள் சேதம்!