வேலூர்: தமிழக முழுவதும் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே லேசான முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (செப் 25) குடியாத்தம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. தொடர் மழையால் உப்பரப்பல்லி அருகே வீட்டின் மண் சுவர் சரிந்து விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
குடியாத்தம் அடுத்த உப்பரப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஞானம்மாள் (55). இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இன்று (செப். 25) காலை வீட்டின் வெளிப் புறத்தில் வந்து நின்று கொண்டிருந்த போது வீட்டின் மண் சுவர் சரிந்து விழுந்துள்ளது.
ஞானம்மாள் மேல் மண் சுவர் விழுந்ததில் அந்த இடத்திலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், உடனடியாக சம்பவம் குறித்து குடியாத்தம் காவல் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த குடியாத்தம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்த இடத்திற்கு குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் அமலு மற்றும் ஒன்றிய தலைவர் சத்யானந்தம் மற்றும் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், வட்டாட்சியர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். தொடர் மழையால் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: திருமணமான இரண்டே ஆண்டில் இளம் பெண் உயிரிழப்பு; சந்தேக மரணமாக வழக்கு பதிவு!
முன்னதாக வேலூர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் சுவர் சீரமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாகச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் இடிபாடுகளில் சிக்கியதில் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: தங்க நகையை பாலிஷ் செய்து தருவதாக கூறி திருட்டு; வட மாநிலத்தவர் கைது!