வேலூர்: விஐடி பல்கலைக்கழகத்தின் 38ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய சிவில் விமானத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "கல்வி என்பது நாம் கற்றதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துத்தான் அமையும். எனவே, மாணவர்கள் தங்களை சுற்றியுள்ள பிரச்சினைகளை கண்டு கவலைப்படாமல் அதனை கையாள கற்றுக்கொள்ளவும், சூழ்நிலைகளை எதிர்கொள்ளவும் தயாராக வேண்டும். வடமாநில மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு விஐடி பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரபிரதேச மாநிலத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும் விஐடி பல்கலைக்கழக கிளையை தொடங்க முன்வர வேண்டும்.
மத்திய அரசு, இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க திட்டமிட்டுள்ளது. அவ்வாறு தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகள் அந்தந்த மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையுடன் இணைந்து செயல்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், செயல்வடிவம் பெறும்போது ஆண்டுதோறும் இன்னும் அதிகப்படியான மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும்.
உலகளவில் பொருளாதாரத்தில் இந்தியா 6.5 சதவீதமாக கொண்ட நாடாக உயர்ந்து உள்ளது. இதன் மூலம், உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்குகின்றன. 2047ஆம் ஆண்டுக்குள் உலகில் முதல் பொருளாதார நாடாக உயரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு துறைகளில் உரிமம் பெறுவது உள்ளிட்டவற்றில் நிலவிய இடையூறுகள் தவிர்க்கப்பட்டு உள்ளதால் கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவில் 428 சுயதொழில் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்திருந்த நிலையில், தற்போது தினமும் சுயதொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்படும் விகிதத்தில் உலகளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இது தவிர, அதிகப்படியான தொழில்களையும், தொழில் முனைவோர்களையும் கொண்ட நாடுகளின் பட்டியலில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது. இதன்மூலம், அயல்நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. அதன்படி, இந்தியாவின் மீது ஏற்பட்டுள்ள நம்பகத்தன்மை காரணமாக கடந்த 9 ஆண்டுகளில் 62 துறைகளில் 162 நாடுகள் முதலீடு செய்துள்ளன. இவற்றில் பாதுகாப்பு, ரயில்வே உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளும் அடங்கும்.
எனவே, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மாணவர்கள் தங்களின் பங்களிப்பு என்ன என்பதை உணர்ந்து பணியாற்றிட வேண்டும். வெற்றிக்காக குறுக்கு வழிகளில் செல்ல வேண்டாம். அறிவாற்றாலை பயன்படுத்தி கடின உழைப்பு, தொடர் முயற்சி மேற்கொண்டு வெற்றி இலக்கை அடைந்திட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: சாலை வசதி இல்லாததால் பறிபோன மருத்துவர் கனவு... கண் கலங்கும் பழங்குடியின மாணவி!