வேலூர்: இந்தியாவில் ஆஸ்டியோபோரஸிஸ் (Osteoporosis), ரியூமெட்டாய்ட் ஆர்தரைட்டிஸ் (Rheumatoid arthritis) போன்ற நோய்களினாலும், ஆண்டுதோறும் ஏற்படக்கூடிய ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சாலை விபத்துகளினாலும் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானோருக்கும் எலும்பு முற்றிலும் முறிந்துவிடுவதால் செயற்கை இம்ப்ளான்ட் (Artificial Bone Implant) பொருத்தப்படுகிறது. சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ரெடிமேடாக கிடைக்கக்கூடிய டைட்டானியம் இம்ப்ளான்டுகளை வெளிநாடுகளிலிருந்து வாங்கி பொருத்த வேண்டிய நிலையும் உள்ளது.
அதிக விலை கொடுத்து வாங்கினாலும் இது போன்ற இம்ப்ளான்ட்கள் உலோகத்தால் ஆனதால், சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அறுவை சிகிச்சையின் மூலம் கட்டாயம் மாற்ற வேண்டிய சூழல் உள்ளது.
புதிய இம்ப்ளான்டுகள்
இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த பின்னர் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீதா மணிவாசகத்தின் வழிகாட்டுதலின்படி பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களான பியர்லின் ஹமீத், அன்ஷீத் ரஹீம், அஸ்வின், ஜிஷிதா ஆகியோர் ஒரு புதிய வகையிலான போரஸ் கைராய்டு இம்ப்ளான்ட் (Porous Gyroid Implants) எனப்படும் நுண்துளைகளுடன் கூடிய இம்ப்ளான்டுகளை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், டாட்டா நிறுவனம் நடத்திய டாட்டா மெட்டீரியல் நெக்ஸ்ட் 2.0 என்னும் போட்டியில் டைட்டன்ஸ் என்ற பெயரில் பங்கேற்று இக்கண்டுபிடிப்புக்கு முதல் பரிசினை இம்மாணவர்கள் வென்றுள்ளனர்.
இது குறித்து இயக்குநர் கீதா மணிவாசகம் கூறுகையில், "நாம் தற்போது பயன்படுத்தக்கூடிய இம்ப்ளான்ட் உடலில் பொருத்தப்பட்ட பிறகு நாளடைவில் சிதைந்துவிடுகிறது என்பதால், இதற்கு மாற்றாக எலும்பின் தன்மையைக் கொண்ட ஒரு இம்ப்ளான்ட் தேவைப்படுகிறது என்பதனை மருத்துவர்கள் மூலம் அறிந்துகொண்டோம். இதுவே, இந்தக் கண்டுபிடிப்பிற்கான உந்துதலாக அமைந்தது.
இந்நிலையில், டாட்டா மெட்டீரியல் நெக்ஸ்ட் 2.0 போட்டியில் பங்கேற்று வழக்கமான இம்ப்ளான்டிற்கு மாற்றாக நுண்துளைகளுடன், எலும்பைப் போன்ற தன்மைகொண்ட போரஸ் கைராய்டு இம்ப்ளான்டுகளை குறைந்த செலவில் தயார் செய்வதற்கான ஆய்வினை மேற்கொண்டு அதனைச் சமர்ப்பித்தோம். 290 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் நாங்கள் முதல் பரிசினை வென்று இருக்கிறோம்" என்றார்.
குறைந்த விலையில் தயாரிப்பு
"கடினமான டைட்டானியம் இம்ப்ளான்டிற்கு மாற்றாக நுண்துளைகளுடன் கூடிய போரஸ் கைராய்டு இம்ப்ளான்ட்களை தயாரிப்பதுதான் எங்களுடைய பிரதான முயற்சியாக இருந்தது. இந்தக் கண்டுபிடிப்பானது நுண்துளைகளுடன் தயாரிக்கப்படுவதனால் நாளடைவில் மனித எலும்புடன் இந்த இம்ப்ளான்ட்கள் ஒருங்கிணைந்துவிடுகின்றன" என்கிறார் ஆராய்ச்சி மாணவி பியர்லின் ஹமீத்.
தொடர்ந்து நம்மிடையே பேசிய பியர்லின் ஹமீத், "நோயாளிகளின் தேவைக்கு ஏற்றவாறு நாம் இந்தப் புதிய வகை இம்ப்ளான்டுகளை வடிவமைத்துக்கொள்ளலாம். வெளிநாடுகளிலிருந்து அதிக விலைக்கு வாங்க வேண்டிய தேவையும் இருக்காது. பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் இதனை நம் நாட்டிலேயே குறைந்த விலையில் தயாரிக்கலாம்.
காப்புரிமை பெறும் முயற்சி
முப்பரிமாண (3D) பிரிண்டிங் தொழில்நுட்ப உதவியுடன் நோயாளியின் தேவைக்கு ஏற்றவாறு இவற்றைத் தயாரித்துக்கொள்ளலாம். வருங்காலங்களில் சி.டி. ஸ்கேன் உதவியுடன் மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயே இவற்றைத் தயாரித்துக்கொள்ளவும் இந்தத் தொழில்நுட்பம் உதவும்" என்றார்.
தற்போது, இந்தப் புதிய வகையிலான இம்ப்ளான்டுகளை இந்தியாவில் தயார் செய்வதற்கான முயற்சியை டாட்டா நிறுவனம் மேற்கொண்டுள்ளது. மேலும், டாட்டா மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து இதற்கான காப்புரிமையைப் பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
இதையும் படிங்க: சீன நிறுவனம் நடத்திய போட்டியில் பண்ணாரி அம்மன் கல்லூரி 2ஆம் இடம் பிடித்து அசத்தல்!