தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுவருகின்றன. அதுபோல வேலூரில் 1,500-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள், இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் திட்டமிட்டபடி சதுப்பேரியில் கரைப்பதற்காக நேற்று ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் கலவரம் ஏதும் ஏற்படாமலிருக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தலைமையில் 2,000-க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த ஊர்வலத்தில் பல்வேறு வண்ணங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன.
வேலூர் சைதாப்பேட்டை கொணவட்டம் வழியாக விநாயகர் சிலைகள் எடுத்துசெல்லப்பட்டு சதுப்பேரியில் கரைக்கப்பட்டன. இதேபோல ஆம்பூர், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆம்பூரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கம்பிக்கொல்லை பகுதியில் உள்ள ஆனை மதகு தடுப்பணையில் பூஜை செய்து ஆரவாரத்துடன் கரைக்கப்பட்டன.