வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது தொடர்ந்து உள்ளாட்சி வார்டு மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுதொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கட்டங்களாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு சமீபத்தில் வார்டு மறுவரையறை வெளியிடப்பட்டது. இந்த நகல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்காக இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் வேலூர் திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அரசியல் கட்சியினர் பெரும்பாலும் தங்கள் பகுதிகளில் உள்ள வார்டுகளை அதிக தொலைவிலுள்ள மற்றொரு வார்டுகளுடன் இணைக்கக் கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்தனர். குறிப்பாக சோளிங்கர் பகுதியில் உள்ள 20 ஊராட்சிகளை பிரித்து காட்பாடி தொகுதியில் இணைப்பதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது சோளிங்கர் பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டுள்ள 20 ஊராட்சிகள் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்பாடியுடன் இணைக்கப்படுவதால் வாக்கு செலுத்துவது உள்பட பல்வேறு விஷயங்களில் தங்களுக்கு சிரமம் ஏற்படும் என முறையிட்டனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஊர் பொதுமக்கள் மனு ஒன்றை அளித்தனர். மேலும் மாதனூர் ஒன்றியத்துக்குட்பட்ட அக்ராவரம் ஊராட்சியை 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு ஊராட்சியுடன் இணைப்பதற்கும் அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். பொது மக்களின் கருத்துக்கள் ஏற்கப்பட்டு விரைவில் பரிசீலனை செய்யப்படும் என கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
இதையும் படிங்க...இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன்