வேலூர்: வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் சுகுமார்(26). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மதன் மகன் அஜித்குமார்(24) என்பவரும் நண்பர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அஜித்குமாருக்கு திருநங்கை ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், இந்த விஷயம் குறித்து சுகுமாருக்கு தகவல் தெரிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடரந்து, இதுதொடர்பாக சுகுமார் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி அஜித்குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் சுகுமாரை கீழே தள்ளிவிட்டு, அவரது தலையில் பெரிய கட்டையால் தாக்கியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த சுகுமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: பெருந்துறை துப்பாக்கிச்சூடு; வாடகை வீட்டின் உரிமையாளர் கூறுவது என்ன?
பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த வேலூர் வடக்கு போலீசார், அஜித்குமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ததோடு அவரை கைது செய்தனர். தற்போது இந்த வழக்கு விசாரணையானது, வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு நேற்று (ஜன.5) நீதிபதி சாந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் அஜித்குமார் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1500 அபராதமும் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு என தெரியாமல் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு!