வேலூர்: சத்துவாச்சாரி பகுதியில் வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம் (ஆவின்) இயங்கி வருகிறது. இங்கிருந்து சுமார் 70 ஆயிரம் லிட்டர் பால்பாக்கெட்டுகள் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பால் முகவர்களுக்கு தினமும் அனுப்பப்படுகிறது.
இங்கிருந்து எடுத்துச் செல்லப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளை வேலூர் உட்பட நான்கு மாவட்டங்களில் உள்ள முகவர்களின் கடைகளுக்குக் கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்த முறையில் மினி லாரிகள், ஆட்டோ, சரக்கு வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பால் பாக்கெட்களை எடுத்துச் செல்வதற்காக ஒப்பந்த வாகனங்கள் ஆவின் அலுவலகத்திற்கு வழக்கம் போல் வந்தன. அங்குள்ள நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் வாகனங்களின் பதிவு எண்கள் மற்றும் வந்த நேரம் உள்ளிட்டவற்றை நோட்டில் எழுதினர். அப்போது ஒரே பதிவு எண்ணில் இரண்டு மினி லாரிகள் ஆவின் அலுவலகத்திற்கு உள்ளே வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை அடுத்து அதனை உறுதி செய்வதற்காக வாகனங்கள் பால்பாக்கெட் ஏற்றி கொண்டிருந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு ஒரே பதிவு எண்கள் கொண்ட இரண்டு மினி லாரிகள் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவலாளிகள் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்து நேரில் பார்வையிட்டு உறுதி செய்த ஆவின் அதிகாரிகள் வண்டிகளில் பால் பாக்கெட் ஏற்றப்பட்டுக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்த கூறினர்.
பின்பு ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு மினி வேன்கள் இருப்பது குறித்தும், போலி பதிவு எண் கொண்ட லாரி பற்றியும் டிரைவர்களிடம் விசாரிக்கும் போது அவர்கள் இதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. இதை அடுத்து வாகனங்கள் அங்கிருந்து வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு ஆவின் அலுவலகத்திற்கு உள்ளேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
நள்ளிரவில் அங்கு வந்த போலி பதிவு எண் கொண்ட வாகனத்தின் உரிமையாளர் சிவகுமார் மற்றும் அதனுடைய ஓட்டுநர் விக்கி ஆகியோர் அங்கிருந்த ஆவின் ஊழியர்களை மிரட்டியும், தகாத வார்த்தைகளால் பேசியும் அந்த வாகனத்தை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து வேலூர் ஆவின் உதவி மேலாளர்( விற்பனை) சிவக்குமார் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது, “நான் மேலாளராக (விற்பனை) 19.04.2023 ம் தேதியிலிருந்து பணிபுரிந்து வருகிறேன். 06.06.2023 ம் தேதி நான் பணியில் இருந்தபோது ஏற்கனவே ஆவின் நிறுவனத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த TN 23 AC1352 என்ற பதிவெண் கொண்ட இரண்டு டாடா 407 வண்டி இருந்ததை நானும், பொது மேலாளர் அவர்களும் பார்த்தோம்.
அதைப் பற்றி விசாரித்தபோது, அதில் ஒரு வண்டி தினேஷ்குமார் என்பவரின் வாகனம் என்றும் அந்த வண்டியின் அசல் ஆவணமும் இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டு அதே பதிவெண் கொண்ட இன்னொரு வண்டியை பற்றி விசாரித்தோம். அப்போது அந்த வண்டியின் ஓனர் சிவக்குமார் என்றும் அவரிடம் மேற்கண்ட பதிவெண் கொண்ட வாகனத்தை பற்றி கேட்ட போது வீட்டிற்குச் சென்று ஆவணங்களை எடுத்து வருவதாகச் சொல்லி விட்டு சென்றார்.
பிறகு அந்த வண்டி ஆவின் நிறுவனத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நான் அன்று இரவு 11.30 மணியளவில் பணியிலிருந்தபோது சிவக்குமார் மற்றும் அவரின் டிரைவர் விக்கி ஆகிய இருவரும் வந்து மேற்கண்ட போலியான பதிவெண் கொண்ட வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த இடத்தில் இருந்து வேறொரு இடத்தில் விடுவதாக சொல்லி வண்டியை எடுக்க முயற்ச்சித்தார்கள்.
நான் எடுக்க கூடாது என்று தடுக்க சிவக்குமார் என்னை கெட்ட வார்த்தையால் திட்டி டிரைவர் விக்கியை வண்டியை எடுடா எவன் தடுக்குறான்னு பாக்குறேன் என்று சொல்ல, வண்டியை எடுக்க வேண்டாம் காலையில் IM S இடம் தகவல் தெரிவித்து பிறகு எடுத்து கொள்ளுங்கள் என தெரிவித்தேன்.
அதற்கு டிரைவர் விக்கி வண்டியை ஆன் செய்து என்னை பார்த்து நீ தடுத்தினா உன்ன கொன்னுடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் வண்டியை இருவரும் ஆவின் நிறுவனத்தில் இருந்து எடுத்து சென்று விட்டனர். இது சம்மந்தமாக எங்களது பொதுமேலாளருக்கு தகவல் தெரிவித்து இன்று 07.06.2023 தேதி நிலையம் வந்து என்னை கெட்ட வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனேவே ஆவினில் இருந்து பால் திருடப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், தற்போது ஆவினில் பிடித்து வைக்கப்பட்டிருந்த வாகனத்தை உரிமையாளரும் டிரைவரும் அத்துமீறி எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.