வேலூரை அடுத்த தோட்டபாளையம் பகுதியில் வசித்துவருபவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி வேளாங்கண்ணி. இன்று பகல்பொழுதில் பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில் சத்யமூர்த்தியின் வீட்டிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் அண்டா பாத்திரங்களை திருடிவிட்டு வெளியே வந்துள்ளார்.
இதை கவனித்த எரிவாயு உருளை விநியோகம் செய்யும் நபர், சத்திய மூர்த்தியின் மனைவி வேளாங்கண்ணிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர்.
தகவலறிந்து வேலூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், அந்த இளைஞர் வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த கலிஷா(27) என்பது தெரியவந்தது.
கலிஷா ஏற்கனவே இது போன்று பல்வேறு வீடுகளில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கோயில் ஒன்றில் உண்டியல் பணத்தை திருடிய விவகாரத்தில் ஏற்கனவே பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கியதாகவும் கூறப்படுகிறது.