வேலூர்: காகிதப்பட்டறை பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 32 வீடுகள், கடைகளை மாநில நெடுஞ்சாலைத்துறையினர் புதன்கிழமை இடித்து அகற்றினர். இதனை எதிர்ப்பு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
வேலூர் மாநகர சாலைகளில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு சாலையோர ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் ஆற்காடு சாலையில் காகிதப்பட்டறை தொடங்கி சத்துவாச்சாரி வரை மாநில நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான சாலையோரப்பகுதிகளை ஆக்கிரமித்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக 50க்கும் மேற்பட்டோர் வீடுகள்,வணிக வளாகங்கள் கட்டி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றிடப் பலமுறை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் யாரும் அகற்றவில்லை என கூறப்படுகிறது.இதையடுத்து,கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் குறித்த முறையான கணக்கெடுக்கப்பட்டதில் 32 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டன. இவை வணிக வளாகங்களாகப் பயன்பாட்டிலிருந்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து,வேலூர் வட்டாட்சியர் செந்தில்,மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் உள்பட நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை,மின்வாரிய அதிகாரிகள் வேலூர் காகிதப்பட்டறை பகுதிக்குப் புதன்கிழமை காலை 7 மணியளவில் வந்தனர். முன்னதாக, வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டதுடன்,ஆக்கிரமிப்பு கட்டடங்களிலிருந்து வெளியேறவும் அறிவுறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன்,பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பகுதியிலிருந்து தங்களை வெளியேற்றக்கூடாது எனக்கூறிக் கதறி அழுதனர்.எனினும், போலீஸார் அவர்களைக் கடுமையாக எச்சரித்ததை அடுத்து அவர்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.இதனையடுத்து 2 பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு 32 ஆக்கிரமிப்புக் கட்டடங்களும் இடித்து அகற்றப்பட்டன.காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கும் பணி மாலை 6 மணிக்கு மேலும் தொடர்ந்தது.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் கூறுகையில், காகிதப்பட்டறை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்த 32 கட்டடங்களும் இடித்து அகற்றப்பட்ட பிறகு இந்த இடம் மாநில நெடுஞ்சாலைத்துறை சொந்தமானது என்ற அடையாள கற்கள் நடப்படும். எனினும்,சாலை விரிவாக்கப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படவில்லை. அதுகுறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றும் பணியால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:"அவருக்கு உடம்பு சரியில்லை ரெஸ்ட் எடுக்கட்டும்" - உதயநிதி ஸ்டாலின் வீடியோ வைரல்!