வேலூர் தொகுதி - ஒரு அறிமுகம்
வேலூர் தொகுதி பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை உள்ளடக்கிய தமிழ்நாட்டின் முக்கியப் பகுதியாகும். இந்தியாவின் முதல் விடுதலை போராட்டமாகக் கருதப்படும் சிப்பாய் புரட்சி வேலூர் கோட்டையில்தான் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் ஆங்கிலேயர்களால் கொன்று குவிக்கப்பட்டனர். இதன் நினைவுச் சின்னம் வேலூர் கோட்டைக்கு எதிர்புறம் உள்ள சாலையில் நிறுவப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கும் வேலூர் மக்களவைத் தொகுதி - வேலூர், அணைக்கட்டு, கே.வி குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.
வாக்காளர்கள் விபரம்
ஆண்கள் - 7 லட்சத்து 1,351 பேர்
பெண்கள் - 7 லட்சத்து 31,099 பேர்
மூன்றாம் பாலினத்தவர் - 105 பேர்
மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 பேர்
பெரும்பான்மை சமூகம் - முதலியார்கள், வன்னியர்கள், இஸ்லாமியர்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் பரவலாக உள்ளனர்.
முக்கிய தொழில்:
விவசாயம், தீப்பெட்டி தொழில், பீடி தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் வேலூர் தொகுதியில் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக குடியாத்தம் பகுதியை குட்டி சிவகாசி என்றழைப்பார்கள். அங்கு அதிகளவிலான தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன.
தொகுதி வரலாறு
1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வேலூர் தொகுதியில் இதுவரை 16 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அதில் அதிகபட்சமாக காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலா நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற மூன்று தேர்தல்களில் இரண்டில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செங்குட்டுவன் என்பவரும் வெற்றி பெற்றார்.
இந்த சூழ்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த வேலூர் மக்களவைத் தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மீண்டும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இம்முறை அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமல் விலகியுள்ளதால், அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
தொகுதியின் முக்கிய பிரச்னைகள்
பிரச்னை 1
வேலூரை பொறுத்தவரை பாலாறு மிக முக்கிய பிரச்னையாக இருந்துவருகிறது. வேலூர் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆந்திரா அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டியுள்ளதால் தமிழ்நாட்டுக்கு வரும் நீரின் அளவு தடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் தற்போது ஆந்திர - தமிழ்நாடு எல்லையில், ஆந்திர அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனால், தமிழ்நாட்டுக்கு வரும் ஒட்டு மொத்த நீரும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் பாலாற்றில் மணல் கொள்ளையும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
பிரச்னை 2
வேலூரில் புகழ்பெற்று விளங்கும் சிஎம்சி (Christian Medical College) மருத்துவமனைக்கு தினந்தோறும் வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். நகரின் முக்கிய பகுதியில் உள்ள இந்த மருத்துவமனையால் வேலூர் - ஆற்காடு சாலையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்ல மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
பிரச்னை 3
வேலூரிலிருந்து ஸ்ரீபுரம் தங்க கோயில் செல்லும் வழியில் அரியூர் ரயில்வே மேம்பாலம் பணி மூன்று ஆண்டுகளாக முடிவடையாமல் கிடப்பில் உள்ளது. இதனால் தங்க கோயில், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் பல கி.மீ தூரம் சுற்றிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதே மார்க்கத்தில் மற்றொரு ரயில்வே மேம்பாலப் பணியும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மாநில அரசு சார்பில் பணிகள் முடிக்கப்பட்டாலும் ரயில்வே துறை சார்பில் பாலத்தின் மையப்பகுதியில் பாலம் அமைக்காமல் இழுத்தடித்து வருகின்றது.
பிரச்னை 4
வேலூர் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தின்படி தற்போது நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்படுவதால் கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் கோடைக் காலங்களில் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
வேட்பாளர்கள் விபரம்
திமுக vs அதிமுக
அதிமுக தரப்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் களமிறங்குகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக கூட்டணி சார்பில் வேலூரில் போட்டியிட்டு 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் செங்குட்டுவனிடம் தோல்வி அடைந்தவர்.
திமுக தரப்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரண்டு பேருமே பணபலம், ஆள்பலம், அதிகார பலம் என அனைத்திலும் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.
இவர்களைத் தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி மற்றும் சுயேச்சைகள் 25 பேர் என வேலூரில் மொத்தம் 28 பேர் போட்டியிடுகின்றனர்.
வெற்றி வாய்ப்பு
திமுகவுக்கு சாதகம்
ஆரம்பத்தில் வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் திமுக பொருளாளர் துரைமுருகனை குறிவைத்து நடத்தப்பட்ட வருமானவரி சோதனைக்குப் பின் மக்கள் மனதில் ஒரு வகையான அனுதாப அலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பரப்புரைகளில் துரைமுருகன் தனக்கே உரிய பாணியில் கண்ணீர் விட்டு அழுது, 'வேண்டும் என்றே என்னைச் சீண்டிப் பார்க்கிறார்கள்' என பேசி வருகிறார். இது தேர்தலில் தனது மகனுக்குச் சாதகமாக அமையும் என்பது துரைமுருகன் கணக்கு.
அதிமுகவுக்கு பாதகம்
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியைப் பொதுமக்கள் விரும்பவில்லை என்பதற்கு உதாரணமாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்ததே சாட்சி. தற்போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றாலும் கூட மக்கள் இன்னும் பாஜக எதிர்ப்பு நிலையிலேயே இருந்து வருகின்றனர்.
இங்கு தொகுதியின் வெற்றிவாய்ப்பைத் தீர்மானிக்கும் அளவுக்கு இஸ்லாமியர்கள் இருக்கின்றனர். முத்தலாக் மசோதா, தேசிய புலனாய்வு அமைப்பு மசோதா என தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்துத் தாக்கும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், இத்தொகுதியிலுள்ள இஸ்லாமியர்களின் வாக்குகள் இயற்கையாகவே திமுக கூட்டணிக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் இதனால் திமுகவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.