வேலூர்: மதுரை, அதிமுக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் கனிமொழி குறித்து ஆபாசமாகவும், அவதூறு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுக சட்டமன்ற உறுப்பினர், மேயர், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணனிடம் குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் அமலு விஜயன் தலைமையில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ப.கார்த்திகேயன், மாவட்ட திமுக அவைத் தலைவர் முகமது சகி உள்ளிட்ட திமுகவினர் ஆகஸ்ட் 23ஆம் தேதி மனு அளித்தனர்.
இதையும் படிங்க: "தேர்தலுக்கு பிறகு இப்போ தான் பார்க்கிறோம்" திருச்சி எம்பியை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு!
அதில், மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் குறித்து ஆபாசமாகவும், அவதூறு பரப்பும் வகையிலும், கொலை மிரட்டல் விடுத்து பேசியதை முன்வரிசையில் அமர்ந்து அனைத்து அதிமுக தலைவர்களும் ரசித்து ஏளனமாக கைத்தட்டி சிரித்துள்ளனர்.
லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் இவ்வாறு பேசியது மட்டுமின்றி அதனை அவர்களது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பவும் செய்துள்ளனர். பொதுவெளியில் அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்வது என்ற பெயரில் தனிமனித சுதந்திரத்தை கொச்சைப்படுத்தியும், உண்மைக்கு புறம்பாக தனிப்பட்ட முறையில் ஆபாசமாகவும், அவதூறாகவும், அநாகரிகமாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேச வைத்தும், பாட்டுப்பாட வைத்தும் அதனை அதிமுக தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, நிர்வாகிகள் ரசித்து பார்த்துள்ளனர்.
எனவே, மாநாடு நடத்திய நிர்வாகிகள், பாடலை பாடிய நபர்கள் மீது பொது நலனுக்கு குந்தகம் விளைவித்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திடவும், சட்டத்துக்கு புறமான செயலை செய்த நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக கைது செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "தமிழக அரசின் பொது பாடத்திட்டத்தை எதிர்ப்பது வரம்பு மீறிய செயல்" - ஆளுநரை திரும்பப் பெற ஜனாதிபதிக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை