வேலூர் மாவட்டம் ஏலகிரி மலையில் அத்தனாவூர் பகுதியில் உள்ள இராமகிருஷ்ணா மடத்தில் மலைவாழ் மக்களுக்கு கம்பளி வழங்கும் விழா மற்றும் நடமாடும் மருத்துவ ஊர்தி தொடக்கவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டார். பின்னர் 500 மலைவாழ் மக்களுக்கு கம்பளிகள் மற்றும் நடமாடும் மருத்துவ ஊர்தியை கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
மேலும் அத்தனாவூர் உண்டு உறைவிடம் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். புதியதாகத் தங்கும் விடுதி கட்டுமான வேலையை பார்வையிட்டார். அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சிக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'டெங்கு காய்ச்சல் வேலூர் மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவருகின்றது. மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளேன். மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் 46 பேர் பிடிபட்டுள்ளனர். போலி மருத்துவர்களை நம்பி மருத்துவம் பார்க்க வேண்டாம். டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட ஒவ்வொருவரும் வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்' என்று கூறினார்.
இதையும் படிங்க: வேலூரில் டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழிப்பு!