வேலூர்: மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் இந்துமதி (30), 2017இல் பணிக்குச் சேர்ந்த இவர் சில ஆண்டுகளாக வேலூர் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றிவருகிறார். இவருக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவரது கணவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில் இவர் பாகாயத்தில் உள்ள தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பணியை முடித்துவிட்டு ஆயுதப்படை குடியிருப்புக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் பணிக்குத் திரும்பாத நிலையில் சக பெண் காவலர்கள் அவருடைய தொலைபேசியைத் தொடர்புகொண்டுள்ளனர்.
ஆனால், தொலைபேசி தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாகத் தெரிவித்ததால், இது குறித்து சக காவலர்கள் ஆயுதப்படை தலைமை அலுவலகத்திற்குத் தகவல் அளித்தனர். அந்தத் தகவலின்பேரில் அவரது குடும்பத்தினர், நேற்று இரவு 10.30 குடியிருப்புப் பகுதியில் வந்து பார்த்தபோது, வீடு பூட்டியிருந்த நிலையில், கதவை உடைத்துப் பார்த்தபோது இந்துமதி மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது.